Friday, January 23, 2015

அவினாஷ் டைம்ஸ்

ரொம்ப நாளாகவே வீட்டம்மணி சொல்லிட்டு இருக்காங்க, பையனை கூட்டிப்போய் காது டெஸ்ட் எடுக்கணும்னு. கூப்பிடும் போது சரியாய் respond பண்ணுவதில்லை என்பது தான் காரணம். அவன் டிவி பார்க்கும் சமயங்களில் அம்மாதிரி இருப்பதை நானும் கவனித்திருக்கிறேன். கவனம் முழுவதும் ஒரே விஷயத்திலேயே இருப்பதால் அவ்வாறு இருக்கலாம் என்று நான் தட்டிக் கழித்தே வந்தேன். இன்றைக்கு சட்டை மற்றும் டிரௌசரை பிடித்தே கேட்டு விட்டார்கள். கூப்பிட்டு போக முடியுமா ? முடியாதா ? என்று.
ஒரு வெப்சைட் இருக்கிறது. வெவ்வேறு டெசிபல்களில் ஒலியை ஒலிக்க விட்டு ஹெட் போன் மாட்டி நம் காதுகளில் ஒலி திறனை சுயமாய் பரிசோதனை செய்து கொள்ளலாம். அந்த வெப்சைட் தேடி எடுப்பதற்கு முன் physical டெஸ்ட் ஒன்றை நாமே எடுக்கலாமே என்று களத்தில் இறங்கினேன்.
ஹாலில் ஒரு இறுதியில் நானும் அவனும் ஒருவருக்கு ஒருவர் முதுகு காட்டியவாறு நின்று கொண்டோம். அவனை அங்கேயே நிறுத்தி இருக்கச் சொல்லி, நான் இரண்டடி முன் நகர்ந்து, குரலை ஒரே டெசிபலில் இருக்கிற மாதிரி வைத்து கேள்விகளை கேட்க ஆரம்பித்தேன். 
"அவினாஷ், உன் பெயர் என்ன ?" smile emoticon
"என்னப்பா...நீங்களே answer சொல்றீங்க...'R P அவினாஷ்' ப்பா..
மேலும் இரண்டடி முன் நகர்ந்து....
"என்ன ஸ்டாண்டர்ட் படிக்கிறீங்க..,."
"II B"
மறுபடியும் இரண்டடி முன் நகர்ந்து....
"ஸ்கூலுக்கு எதில போவீங்க ...."
"போகும் போது பைக்ல.. உங்க கூட, வரும் போது ஆட்டோல..."
இரண்டடி முன்...
"அப்பா, என்ன பைக் வச்சிருக்காரு..."
"சுசுகி 150"
"வெரி குட்"
இரண்டடி....
"அப்பா use பண்ற லேப்டாப் என்ன கம்பெனி ....?"
"சோனி ப்பா ..."
"வெரி குட்"
இரண்டடி....
"தாத்தா பேரு என்ன....?
"ஜீவன் ராம்"
இரண்டடி....
"பாட்டி பேரு....?
"சரோஜாம்மாள்..."
இரண்டடி....
"சரி... அப்பா use பண்ற மொபைல் என்ன கம்பெனி ....?"
சொன்னான்...
எனக்குத் தான் கேட்கவில்லை.....

1 comment:

  1. வலைச்சர அறிமுக வாழ்த்துகள்...

    http://blogintamil.blogspot.in/2015/06/blog-post_19.html

    ReplyDelete