Saturday, December 27, 2014

கயல் (2014 - தமிழ்)


படத்தில்  இரண்டே வகையான கேரக்டர்கள். ஒன்று நல்லவர்கள். இரண்டு மிக மிக நல்லவர்கள். இந்த மாதிரி கேரக்டர்களை முன்பு விக்ரமன் படங்களில் பார்க்கலாம். இப்போது பிரபு சலோமன். அந்த மாதிரி கயல் படத்திலும் பெரும்பாலான கதாபாத்திரங்கள் மேற்கண்ட இரண்டு வகைகளிலே இருக்கிறார்கள். காலம் காலமாக தமிழ் சினிமாக்களில் வில்லன்களாகவே சித்தரிக்கப்படும் லாரி டிரைவரை நல்லவனாக சித்தரித்து அந்த சம்பிரதாயத்தை கட்டுடைத்து இருக்கிறார்.
படம் முதல் பாதியில் நன்றாய் தான் செல்கிறது. கதையும் அது பயணிக்கும் களனும் கதாபாத்திரங்களும்.. மிக மிக எதார்த்தமாய் தான் காட்சிகள் நகர்கிறது. நாயகன், நாயகி முதற்கொண்டு அனைவரும் புத்தம் புது முகங்கள். ஏனோ தெரியவில்லை, எங்கே எங்கேயாவது குபீரென தம்பி ராமையா வந்து விடுவாரோ என்ற பயம் இருந்து கொண்டே இருந்தது.
ஆறு மாசம் சம்பாதிங்க….ஆறு மாசம் அதை ஜாலியா செலவு பண்ணுங்க…. அதுவும் ஊர் ஊராய் சுற்றி… மாதிரி மெசேஜ் சொல்கிறார்கள். கேக்குறதுக்கே செம சூப்பரா இருக்குல்ல. ஹீரோவும் அவரின் நண்பரும் அந்த மாதிரி தான் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அப்படிச் சுற்றும் போது ஒரு ஊரில் ஓடிப் போகும் காதலர்களுக்கு எதேச்சையாக உதவி செய்ய நேரிடுகிறது.. ஓடி போனவர்களின் நண்பர்கள் இவர்கள் என நினைத்து… பிடித்து வைத்து அடித்து உதைத்து விசாரிக்கிறார்கள்… ஓடி போன பெண்ணின் ஊர் பெரிய மனிதரின் வீட்டில். அங்கு வேலை செய்யும் பெண்ணாக கயலை சந்திக்கிறான் நாயகன். கண்டவுடன் காதல் கொள்கிறான். “உள்ள பூந்து கொடாயுது” என்றெல்லாம் வசனம் பேசுகிறார். ஹீரோ பேசிய காதல் வசனங்களை வீட்டில் வேலை பார்க்கும் மற்ற இரு ஜோடிகளை.. ஹீரோ பேசிய அதே வசனங்களை பேச வைத்து அதை காமெடியாகவும் சீரியஸ் ஆகவும் உருவாகப்படுத்துவதில் இயக்குனர் நிற்கிறார். அந்த மாதிரி ஆங்கங்கே சிற்சில கதாப்பாத்திரங்கள் காமெடி செய்து நம்மை ரிலாக்ஸ் செய்து படத்தை ரசிக்க செய்து விடுகிறார்கள்.
இடைவேளையின் போது இணையதள விமர்சகர்களை குறித்து ஆழ்ந்த சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது. சினிமாக் காரங்க சொல்ற மாதிரி இஷ்டத்துக்கு விமர்சனத்த அவுத்து விட்டு நாஸ்தி பண்றாங்களோ என்று… ஒரு ஸ்டிக் ஐசை வாங்கி சப்பியபடி இரண்டாம் பாதியை எதிர் நோக்கி உட்கார்ந்தேன்.
அவ்ளோ தாங்க.. மேலே சொல்றதுக்கு ஒன்னுமே இல்லை. ஹீரோயின் ஹீரோவை தேடிப் போறாங்க… ஹீரோ ஹீரோயினை தேடிப் போகிறார்…. கிளைமாசில பாத்துகுறாங்க. சுனாமி வருது… பிரியுறாங்க..அப்புறமா சேர்ந்துறாங்க.. நாலு வரியில முடிஞ்சு போச்சுல்ல. ஆனா அதை அப்படி இழுத்துருக்காங்க ஒரு மணி நேரத்துக்கும் மேலாக. அப்படித்தான் படம் தொங்கலாகி போய் விடுகிறது.
ஆனா படத்துல மூணு அருமையான மெலடி பாட்டு இருக்குங்க…
படத்தில் நெருடிய ஒரு விஷயம்… இயக்குனர் அவர் மதம் சார்ந்த அடையாளங்களை அவ்வப்போது வெளிப்படுத்துகிறார். இட்ஸ் ஓகே படத்தின் ஹீரோ அந்த மதத்தை சேர்ந்தவர் அதனால் என்று விட்டு விடலாம். ஆனால் போன படத்தின் (கும்கி) வெற்றி விழாவின் போதே
அதை பகிரங்கமாகவே வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார். பொது வெளியில் இயங்குபவர்கள் அவ்வாறு இருப்பதை தவிர்க்கலாம்.

0 comments:

Post a Comment